இந்த வலைப்பதிவில் தேடு

14 மே, 2024

அத்தைகள் இருந்தார்கள்

அத்தைகள் இருந்தார்கள்



பாசமலர் படத்துக்குப் போகும்போதே

 அழுதழுது தலைவலிக்கும் என்பதால்

அனாசின் மாத்திரை வாங்கி

முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு க கொண்டு போன 

அத்தைகள் இருந்தார்கள்.


எம்மகள கட்டிக்கடா மருமகனே

என்றபடியே அண்ணன் மகன்களின்

குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட 

அத்தைகளிருந்தார்கள்.


சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள்

நீந்தும் கோழிக்குழம்பை

 இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால்  மூடிக் கொண்டு வந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன

அத்தைகளிருந்தார்கள்.


மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் 

கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி

காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய

அத்தைகளிருந்தார்கள்.


குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் 

நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த

அத்தைகளிருந்தார்கள்.


இடுப்பில் தூக்கிச் சுமந்துபோய் திருவிழாவில்  மருமகன் அழுவதைக் காணப்பொறாமல் 

இராட்டினத்தில் சுற்றும் சுகத்தையும் கொடுத்த

அத்தைகளிருந்தார்கள்.


SSLC முடித்து பாலிடெக்னிக் சேர்க்க

பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதைவெச்சு காலேஜுல சேர்த்துங்க அண்ணி.

அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக் கழட்டிக் கொடுத்துப்போன

 அத்தைகளிருந்தார்கள்..


வெட்கத்தில் நெளிந்தபடி

உடைந்த விடலை இருகுரலில் பேசும் மருமகனின் அரும்புமீசைப் பூனைமயிர்களைச் 

செல்லமாய்ப் பிடித்து இழுத்தபடி என் மருமவனே வயசுக்கு வந்திட்டேடா என்று கிண்டலடித்துக் கூச வைத்த 

அத்தைகளிருந்தார்கள்.


சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை வந்தகாலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மண்சோறு தின்ற வெள்ளந்தி 

அத்தைகளிருந்தார்கள்.

எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல் பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா என்று அண்ணனிடம் சண்டையிட்டுப்போன

அத்தைகள் இருந்தார்கள்.


போகட்டும் ரெண்டாம் மகனுக்காவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரனும் எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு

மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டே மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தபடி மூத்தவனின் திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த 

அத்தைகளிருந்தார்கள்.


அண்ணன் பாவம்  நொடிஞ்சி கெடக்குது எனக்கு வீடெல்லாம் வேண்டாம் 

அண்ணனுக்கே கொடுத்திருங்க. 

ஒங்க மாப்பிள்ளைகிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம்

அண்ணணுக்காக மன்றாடிய 

அத்தைகள்  இருந்தார்கள்.


எல்லாந் தொலைந்து கூட்டுக் குடும்பங்கள் அழிந்துபோய் 

காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக்

குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு

வாய்க்கப் போவதேயில்லை....

அத்தைகளின் பாசப் பெருமழை...!...

24 பிப்ரவரி, 2024

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை
மின்சாரக் கம்பத்தில்
அவரைப் பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்குக் கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுகொண்டிருந்தன.

கண்களுக்குக் கீழே
சோகமாகப்
பார்த்துக்கொண்டிருந்தார்.

புகைப்படத்துக்குக் கீழே வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
என்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரைக் காணவில்லை
நண்பர்கள் மட்டும் இருந்தனர்.

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கிக்கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்

யாரோ ஒருவன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்.

இறுதி வரை அழுதுகொண்டிருந்தன
இரண்டு கண்கள்

ஒருநாள்
அதுவும் மறைந்துவிட்டது! 

- என்.விநாயகமுருகன்

நகுலன் கவிதைகள்

நகுலன் கவிதைகள் 

எனக்கு யாருமில்லை
நான்
கூட...
-------------------------

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
-------------------------

நான் இறந்த பின்
யாரும் எனக்கு விழா எடுக்க வேண்டாம்,
என்னால் கலந்துகொள்ள முடியாது
-------------------------

மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!
-------------------------

மனதின்  எந்த கதவு  எப்போது  திறக்கும்,
என யாருக்கு தெரியும்?
-------------------------

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
-------------------------

வேலைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு
-------------------------

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.
-------------------------

அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
-------------------------

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமற்
போகிறோம்

19 மே, 2022

படித்ததில் பிடித்த கவிதைகள்

படித்ததில் பிடித்த கவிதைகள்

















எதையும் சொல்லவில்லை. 
எதையும் கேட்கவில்லை.
'சும்மாதான் வந்தேன்' என்று'
விட்டுப் போனான். 
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள் முக்கியம் எனக்கு.

- கல்யாண்ஜி

சின்னச் சின்னக் கவிதைகள்

சின்னச் சின்னக் கவிதைகள் 


கல்வி என்பது உள்ளே இருப்பதை
வெளியே கொண்டுவருவது தான்
வெளியில் இருப்பதை உள்ளே திணிப்பதல்ல

-அப்துல்ரகுமான்


குளிர் காய்வதற்காய் 
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே 
உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

-அப்துல் ரகுமான்


முதுகெலும்பு இல்லாத
ஒரே குற்றம் தான்.
முள்ளில் எளிதாக
வளைத்துக் கோர்க்க
புழுக்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்
தூண்டில்காரர்கள்.

-கண்மணி குணசேகரன்


இப்படித் தான் இருக்கும்
என்று ஏற்றுக் 
கொள்ளாதீர்கள்.
எப்படியும் இருக்கட்டும்
என்று விட்டு விடாதீர்கள்.

-கல்யாண்ஜி


(எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிறார்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும்.

எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிறார்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்

-நா.பார்த்தசாரதி)



நடு ராத்திரியில்
வாங்கி வர சொன்ன பொம்மையை 
தூங்கி போன குழந்தையின் அருகில் வைத்து 
தலை தடவி பார்க்கும்
ஒரு தகப்பனின்
மூச்சில் ஓடிக்கொண்டிருக்கிறது

பேரன்பின் வெப்பம்!


- யாரோ

காதல் கவிதைகள்

என்னை என் குறைகளோடு
ஏற்றுக்கொள்கிறவனே 
என் காதலன் என்றாள் அவள்

அவளை
ஏற்றுக்கொண்டவன் சொன்ன
முதல் வாக்கியத்திலேயே
மூர்ச்சையுற்றாள்

இதோ...
பாட்டு வரிகள்

--- வைரமுத்து 








20 பிப்ரவரி, 2022

பிடித்த கவிதைகள் சில

பிடித்த கவிதைகள் சில

மனுஷ்ய புத்திரன் :


கோ.மோகன்ராம்

அரிக்கண்ணன் :

வண்ணதாசன் கல்யாண்ஜி



ஃப்ரான்சிஸ் கிருபா :


கி.சரஸ்வதி
எஸ்.ஆர்.இராஜாராம்

சாய்மீரா

: