இந்த வலைப்பதிவில் தேடு

23 நவம்பர், 2011

வைரமுத்து காதல் கவிதை வரிகள் :



வைரமுத்து காதல் கவிதை வரிகள்


என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்



.....................................................

என் பெயரே
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
......................................................

என்னை
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
.....................................................

முதலில் –
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.






















உன்
அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
.......................................................

கண்ணே !
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிற
..........................................................***************

22 நவம்பர், 2011




    பாலகுமாரன் கவிதைகள் 2





  • *மெர்க்குரிப் பூக்களிலிருந்து ---
    இடுப்பை விட்டு எங்கானாலும்
    இறங்க மாட்டேன் என்கிறதாய்
    அவளின் நினைப்பை இடுக்கி கொண்டு
    அடங்கள் செய்யுது மனக் குழந்தை

    தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி
    பறவைகள் போகுது பாரென்றால்
    கண்ணை விரித்துக் கணங்கள் தயங்கி
    மீண்டும் தாவுது அவளுக்காய்

    அதட்டிப் பார்த்து அன்பாய் சொல்லி
    அசிங்கம் என்பினும் பயனில்லை
    இறுக்க அவளை இடுக்கிக் கொண்டு
    ஜொள்ளை உரியுது மனக்குழந்தை.
    ==============================






  • வெப்பம் :

  • நீரோடு கோலம் காணா நிலைப்படியும்
    நெளிந்தாடு சேலை இல்லாத் துணிக் கொடியும்
    மலர விட்டுத்தரை உதிர்க்கும் பூச்செடியும்
    வாளியும் கிணற்றடியும்
    கைப்பிடிச் சுவரும்
    வரளுகின்றன – என்னைப் போல்
    அவளில்லா
    வெறுமையில்

    ==============================






  • வடு :-
    அம்மா இழுத்த சூடும்
    அப்பா இறைத்த வசவும்
    இன்னுமிருக்கின்றன –
    என்னில்
    பசுமையாய் –
    நடுமரத்தில் நம் பெயரை
    நீ செதுக்கின வடு மாதிரி
    நீயோ –
    மரம் மாதிரி
    ==============================






  • ஸ்னேகிதம் :-
    நேற்று நீ மறந்து போனாய்
    போகையில் முத்தம் கொடுக்க
    மறுபடி மறுபடி நெஞ்சில்
    இக்குறை வந்து தாக்க
    பூக்களை முத்தமிட்டேன்
    புற்களை முத்தமிட்டேன்

    காகிதம்,பேனா,பென்சில்
    கடக்கின்ற காற்று, கை விரல்
    ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்.

    நேற்று நீ மறந்து போனாய்
    ஊர் முழுக்க ஸ்னேகிதமாச்சு
    திடுமென்று நினைவு மின்னி
    மறுபடி எனைப் பார்க்க வந்தாய்

    உன் பக்க கணக்கு முழுவதும்
    வெட்கமின்றி சொல்லுவாயோ.

    - பாலகுமாரன்






ஆனந்த வயல் நாவலிலிருந்து சில வரிகள் ....
ரணம் பட்ட புலியிடம் வேதகோஷம் எடுபடாது. எதிர்த்து அடிக்கத்தான் செய்யும். மனிதன் சகல நேரமும் நல்லவனில்லை. இருத்தல் கடினமும் கூட. அவன் நெஞ்சடியில் எப்போதும் ஒரு மிருகம் உண்டு. அந்த மிருகத்துக்கு குரோதம் என்று பெயர். காமத்தால் மட்டும்,காமம் என்று அழைக்கப்படுகிற ஆசையால் மட்டும் குரோதம் வருவதில்லை. அவமானமும் குரோதம் வளர்க்கும். மான,அவமானமற்று நிற்பது பெருஞ்செயல், ஞானிகளுக்கு உண்டான விஷயம். ரத்தத்திற்கு ரத்தம்,உயிருக்கு உயிர், பழிக்குப் பழி மனித சமுதாயத்தில் காலம் காலமாய் வரும் விஷயம். உள்ளே இருக்கும் அகக்கண் மூட, காலத்தின் தொலைவு தெரியாது போகும். நாலு நாட்கள் கழித்து இப்படி ஒரு செயல் நானா செய்தேன் என்கிற நினைப்பு வந்தாலும் செயல் நடத்த வேண்டிய நேரத்தில் சிந்தனை மழுங்கி நிற்கும் வாய்ப்பே அதிகம்.
****************************************

20 நவம்பர், 2011

பாலகுமாரன் கவிதைகள் 1


















விட்டில் பூச்சிகள் :
- பாலகுமாரன்


தவம் :


உனக்கென்ன
சாமி பூதம்
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்ணுக்கள் வலிக்கின்றன
அடியே –
நாளையேனும் மறக்காமல்
வா.


=================================
v மாமிஸம் தேடல் :


சைக்கிளின் பின்னே மாமிஸம் போக
காக்கை அதனைத் துரத்திக் கொத்த
சேலையைப் பார்த்ததும்
பார்வையில் துரத்தினேன்
காக்கைக்கும் எனக்கும்
வேறென்ன வேலை

=================================
v வாழ்த்துக்கள் :


ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயார்க்கின் ஒரு கோணம்
மணமாகி மறந்து விட்ட தங்கைக்குக்கு நினைவோடே
பொக்கை வாய் குழந்தைகள்
காணாதபோது என் கவிதையை, முன் பல்லை
விமர்சிக்கும் நண்பருக்கு கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்கு
ஸீனேரிகள்
அடியே –
போன ஜனவரியில்
புதுப்படத்து அரையிருளில்
காதோரம் நீயிட்ட நீர்த்தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய்
மரபைக் காட்டி
கொண்ட ஒரி கனவையும் குலைத்து விட்ட
உனக்கென்ன அனுப்ப ?
மொட்டை மரம்
புத்தர் படம்
கற்றைக் குழல் ஜானகியின் தனியுருவம் ?
இல்லை --
அட்டைக் கருப்பில்
நீல மசி தோய்த்து, நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்பிகிறேன்
தேடிப் புரிந்து கொள்.

==========================================
v டெலிபோன் துடைப்பவள் :


இன்றைக்கு செவ்வாய்க் கிழமை
நிலா பகலில் வரும்
ஆகவே லேசாய்க் கிளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பியே நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
என்றைக்குச் செவ்வய்க் கிழமை

======================================

v விடலைகள் :


துள்ளித் துவண்டுத் தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்
=======================================
v நகரம் :

பறவைகள் அடையும் பெருமரங்கள் வீழ்ந்து
மனிதர்கள் அடையும் கல் மரங்கள் முளைத்த
காடு
=======================================
v தோழி :
குளத்து முதுகை கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து
அடங்கின நெஞ்சில்
ஆசைகள்
எறிந்து
ஆட்டம் பார்ப்பது அசிங்கம்
யாரும் அறியாது கெட்டிக்கரை உடைக்க
வட்டச் சிற்றலையால் முடியாது
ஓடுகால் நதியல்ல,
எறிந்ததும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.
இது குளம். சலனத்தை
சல்லாபத்தால் மறைக்கத் தெரியாத ஜடம்
பல்காட்டும் உன் பட்டணக்கரை
அலைவரிசையில் நின்று உன் வரிசை காட்டு
இடுப்பு நனைய இளித்து நில்
எழுந்து போ
என்னையும் குளத்தையும்
விட்டு.




19 நவம்பர், 2011

நான் ரசித்த சிறு கவிதைகள்





நான் ரசித்தவற்றை எழுதிய கவிஞர்களுக்கு நன்றி !

சந்தர்ப்பங்கள் :
எடுப்பதற்குள்
நின்று விடும் தொலைபேசி மணி

சற்று வெளியே சென்ற போது
அப்பொழுதுதான் வந்து விட்டுப் போன யாரோ

அந்த முகம்தானா என்று
நினைவூட்டிக் கொள்வதற்குள்
சிக்னலில் விழும் பச்சை

வந்து சேர்வதற்கு
சற்றுமுன் எரியூட்டப்பட்ட உடல்

எப்போதும்
ஒரு கணம்தான் தாமதமாகிறது

- மா.பு.
-------------------------------------------------
ஆட்சி மாற்றம் :

எச்சில் வடிந்த
தலையணையை
திருப்பிப் போட்டேன்
அந்தப் பக்கம்
அதைவிட அசிங்கம் ?

-கவிஞர் அறிவுமதி

---------------------------------------------------

காதல் :

இந்த நதியில்
மட்டுமென்ன...
மீன் தூண்டில் போட
மீனவன்
மாட்டிக் கொள்கிறான்
- மருதுர் மோகன்.

---------------------------------------------------

பயம் :
இறந்த பின்னர்
தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும் பொழுதே
தாலியைக் கட்டுங்கள்...
அது போதும்...
- தஞ்சைப்ரியா
--------------------------------------------------
பெண்ணே !:
நிலவைத்தானே
பார்த்தேன்
மனதில் எப்படி இருள் வந்தது ?
- ராஜ்குமார்
---------------------------------------------------




அழகு:

அவள் அழகு
சாதரண அழகுதான்
ஆனால் எனக்கு
தெய்வீக அழகு...

அவள் வாக்கு
சாதரண வாக்குதான்
ஆனால் எனக்கு
தேவ வாக்கு...

அவள் பெண்
சாதரணப் பெண்தான்
ஆனால் எனக்கு
தேவதை...
- ராஜமுருகு பாண்டியன்
----------------------------------------------------

*மற என்றாய் !
மறந்து போனது
மறப்பது

*இன்று நீ தரும்
பரிசென்ன தெரியுமா...
“உனக்காக எழுதி
நானே வைத்துக் கொள்ளும்
இந்தக் கடிதம்”

*சைக்கிள் ஓட்டக்கற்றுத் தரச்சொல்லி
வேண்டுமென்றே என் மேல்
சாய்ந்த போதா நுழைந்திருப்பாய்
என்னில்

*அதான்
பிடிக்கவில்லை என்றாயே
பிறகேன்
வந்து வந்து போகிறாய்
என்னுள்
- கார்முகில்
---------------------------------------------
மழையில் நனைய ஆசைதான்
சட்டைப்பைக்குள்....
அவள் கடிதம் !
-தங்கம் மூர்த்தி
--------------------------------------------
புரையேறும் போது
நினைத்துக் கொள்வேன்
நீ நினைப்பதாக !
- சிவ பாரதி
--------------------------------------------
சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில்
ஒரு பறவையின்
வாழ்வை
எழுதிச் செல்கிறது.
-தருமு அரூப் சிவராம்




16 நவம்பர், 2011

பாகம் 2 கவிஞர் மு.மேத்தாவின் காதல் கவிதைகள்



கவிஞர் மு.மேத்தாவின்
காதல் கவிதைகள் பாகம் 2 :
(தொடர்ச்சி...)


பார்வை : 

சுற்றுவதை நிறுத்து
சுற்றுவதை நிறுத்து
என்று
அப்பா சொன்னார்
பையனிடம்

பக்கத்து வீட்டுக்
காரி(கை)யின் பார்வையில்
சாட்டை இருக்கிறது
பம்பரம்
என்ன செய்ய்ம்
பாவம்.


பாடங்கள் முடியவில்லை:
புத்தகத்தைக்
கையில் வைத்திருந்த
அவளைப்
பார்த்த பிறகுதான்
புரிந்தது...
நான்
படிக்க வேண்டியது
எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என்று.


எங்கிருக்கிறாய்?:

நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.


படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்


கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது


மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.


அருகில் நீ இருந்த போது
என்னையே கேட்டுக் கொண்டேன்
“நான் யார்?” என்று....
இங்கிருந்து நீ
போய் விட்ட பிறகு
இவர்கள் என்னைக் கேட்டார்கள்
“நீ யார்?” என்று!


புதையல்

கண்களால் நீ எழுதும்
கவிதைகளுக்கு
அர்த்தம் புரியாமல்
நான்
அவதிப்படுகிறேன்
அருள்கூர்ந்து
உன்னுடைய
கைகளால்
உரை எழுத மாட்டாயா?


சிரிப்பில் ஒரு நெருப்பு:

அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !
கடைக்கண் பார்வைக்கும்
கண நேரப் புன்னகைக்கும்
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !

இரண்டாம் நாளே
ஏலம் போட்டு விட்டாளே !
அவளுடைய வீட்டில்
என் பெயர்
அடிபடவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்...
நானே தெருவில்
அடிபடும்படி
செய்து விட்டாளே !
வீதியில் தடுமாறி
விழுந்த போது கேட்டார்கள்:
‘எது உன்னை இடறியது?’

எப்படி சொல்ல முடியும்...
எதிரே வந்த
ஒரு பெண்ணின்
புன்னகைதான் என்னை
புரட்டி விட்டதென்று !

@ தீக்குச்சிகளைத்
தேடிக் கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள் ....
சிரிப்பிலிருந்து
நெருப்பை உண்டாக்குவது
எப்படி என்று !

@என் கல்லறைக்கு
வரும்போதாவது
அவளைப் பார்த்து
யாராவது கேளுங்கள் .....
அந்தப் புன்னகைக்கு
அர்த்தம் என்னவென்று !


************************
ஆகாய தேவதை
பூமியின் பாடகன்


ஒவ்வொரு நாளும்
வார்த்தைகளெல்லாம் வந்து
வரம் கேட்கின்றன.
உன்னைப் பற்றி எழுதும்
கவிதைகளில்
ஒதுக்கி விடாமல்
தம்மை
உபயோகித்துக் கொள்ளுமாறு...

@
உனக்காகச்
சீவி சிங்காரித்து
அனுப்பி வைக்கும்போது
வளமில்லாத
எந்த வார்த்தையும்
வயதுக்கு வந்து விடுகிறது.

உதைக்கும் நினைவுகள் :

உன்னிடம் நான்
வந்த போது
உன் கடந்த காலமும்
என் எதிர்காலமும்
மறந்து போய் விட்டது. !

உன்னுடைய நினைவுகள்
என்னை உதைத்து விளையாடுகின்றன
பந்தாக மாறி ...
நான்
படுபாடு படுகிறேன்
உற்சாகமாய் கைதட்டி
ரசிப்பவர் கூட்டத்தில்
ஒருத்தியாக
நீயும்
உட்கார்ந்திருக்கிறாய்...


**********************

உன்னுடைய அழைப்புக்கள்:
..................................
பட்டிக்காட்டுத்தன்மான
பெயர்தான்
உன்னுடைய பெயர்....
அதுதான் எனக்கு
நாகரீகத்தின்
ஞாபகச் சின்னமாகி விட்டது...
நைல் நதி மாதிரி !

தொலைவில் நீ
இருந்த போது
என் அருகில் இருப்பது போல்
தோன்றியது...
அருகில் வந்த பிறகுதான்
நீ
வெகு தொலைவில் இருப்பதே
விளங்கியது !


**********************


மலர்கள் கோபித்துக் கொள்கின்றன :

..........................
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது !
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும் !

......................................

**********************

இது கேள்விகள் கிடைக்கும் இடம் :

........................................
இதென்ன
இந்த விழிக்குளம்...
மீனயும் காட்டுகிறது..
தூண்டிலையும் நீட்டுகிறது !



14 நவம்பர், 2011

கவிஞர் மு.மேத்தாவின் காதல் கவிதைகள் :





அவளைக்
கண்டவுடன்
என் கையில் கட்டியுள்ள
கடிகாரம் கூட
நின்று விடுகிறது
அதற்கும் சேர்த்துத்தான்
அடித்துக் கொள்கிறதே
இதயத்தினுள் அலாரம்


*************************   *************************

கத்தி மாதிரிக்
கண்கள் - என்றேன்
என் இதயத்தின் மீதுதான்
தீட்டி பார்க்கப் போகிறாய்
என்பதைத்
தெரிந்து கொள்ளாமல்


எனக்குத் தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல
என் கவிதைகளைத்தான்
என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான்தான்
என்று?

                                                        *************************

படிப்பதற்கு
உனக்குப்
பயன்படும் உன்னுடைய
கண்களைத்தான்
உன்னை நான்
படிப்பதற்கும்
பயன்படுத்துகிறேன்

**************************


வேறு யாரோ 
ஒருவனுடன் 
நிச்சயதாம்பூலம்
நிகழ்த்திக் கொண்டிருக்கிற
உன் பெற்றோர்
உணர்ந்து கொள்ளட்டும்
நான் 
தேவதாஸ் அல்ல
பிருதிவிராஜன்
**************************



வீணையைக் 
கையிலேந்தி 
நின்றிருந்தாய்.....
மெல்ல நெருங்கி
‘மீட்டட்டுமா?..’
என்றேன்
சரியெனத் 
தலையசைத்துச்
சம்மதித்தாய்.
உனக்குத் தெரியும்
வீணை வாசிக்க
எனக்குத்
தெரியாது 
என்பது.


                                                     *************************

13 நவம்பர், 2011

சுதந்திரம் - கவிதைகள்



நான் ரசித்தவை கவிதை 2

சுதந்திரம் என்ற தலைப்பில் நான் வாசித்தவற்றில் ரசித்தவற்றை இங்கே பதிக்கிறேன்

சுதந்திரம் :

சும்மா இருப்பதற்கு
இங்கே
சுதந்திரம் உண்டு !
சுறுசுறுப்பாய்
இருப்பதென்றால்
அதற்கு
அரசாங்க
அனுமதி வேண்டும் ! – மு.மேத்தா
**********************************
கூண்டு திறந்தது
சிறகடித்துப் பறக்கவா ?
ம்..ம்..ம்
சீட்டெடுக்க..- அக்னிப்புத்திரன்


**********************************

இரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை
- அரங்கநாதன்
**********************************
1947 ஆகஸ்டு 15:
அவன்
ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது –
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது.
- வைரமுத்து.

**********************************

இரண்டடிக் கயிற்றால்
முளையுடன் கட்டப்பட்டுள்ள
மாடு கதறியது.
மா...மா..மா....
எங்கிருந்தோ வந்த ஒருவன்
இரண்டடிக் கயிற்றை அவிழ்த்து
இருபதடிக் கயிற்றைக் கட்ட
மாடு இன்று துள்ளுகிறது
சுதந்திரம் அடைந்து விட்டதாய் !

............................

பழத்தினை
நறுக்க வாங்கிக்
கழுத்தினை
அறுத்துக் கொண்டோம்

......................

சுவாச தாங்களால்
உயிர்ப்பித்தோம் உன்னை
சுதந்திர தேவி !
உன் கோயிலே
எங்களின் சிறையானது

....................

எங்கள் விலங்குகள்
கழற்றப்படவில்லை.
சாவிகள்தாம் கை மாறின

..................

உன் பஜனைப் பாடல்
உதடுகளை அரிக்கிறது

..................

உன் திருவிழா நாளில் மட்டும்
பிச்சைப் பாத்திரங்களை
மகுடங்களாக அணியும்
‘ராஜபார்ட்டுக்கள்’ நாங்கள்

- கவிக்கோ. அப்துல் ரகுமான்

12 நவம்பர், 2011

நான் ரசித்தவை-வல்லிக்கண்ணன் கவிதை



நான் ரசித்தவை 1



விதி :

நடந்தே அழியணும்

வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி


நாய் அடிக்கடிக் குரைக்கிறது
உன் குறை கூறல் போல

இரவுகளில் ஆந்தைகளின் அலறல்
என் தூக்கத்தைக் கெடுக்கிறது
உன் முணுமுணுப்புப் போல

என் முன்னே நீ இல்லையெனினும்
என் அன்பே உன்னை நான்
எப்படி மறப்பேன்
 


- வல்லிக்கண்ணன்

11 நவம்பர், 2011

இது என் கன்னி முயற்சி !

நான் படித்தவற்றை, படித்து ரசித்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது ரசனையும் , மற்றவர்கள் ரசனையும் ஒத்துப் போகும் போது சந்தோஷப்படுவோம். முரண்படும்போதோ விவாதித்து விளங்க முயற்சிப்போம்.

நூர்தீன்