இந்த வலைப்பதிவில் தேடு

20 நவம்பர், 2011

பாலகுமாரன் கவிதைகள் 1


















விட்டில் பூச்சிகள் :
- பாலகுமாரன்


தவம் :


உனக்கென்ன
சாமி பூதம்
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்ணுக்கள் வலிக்கின்றன
அடியே –
நாளையேனும் மறக்காமல்
வா.


=================================
v மாமிஸம் தேடல் :


சைக்கிளின் பின்னே மாமிஸம் போக
காக்கை அதனைத் துரத்திக் கொத்த
சேலையைப் பார்த்ததும்
பார்வையில் துரத்தினேன்
காக்கைக்கும் எனக்கும்
வேறென்ன வேலை

=================================
v வாழ்த்துக்கள் :


ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயார்க்கின் ஒரு கோணம்
மணமாகி மறந்து விட்ட தங்கைக்குக்கு நினைவோடே
பொக்கை வாய் குழந்தைகள்
காணாதபோது என் கவிதையை, முன் பல்லை
விமர்சிக்கும் நண்பருக்கு கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்கு
ஸீனேரிகள்
அடியே –
போன ஜனவரியில்
புதுப்படத்து அரையிருளில்
காதோரம் நீயிட்ட நீர்த்தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய்
மரபைக் காட்டி
கொண்ட ஒரி கனவையும் குலைத்து விட்ட
உனக்கென்ன அனுப்ப ?
மொட்டை மரம்
புத்தர் படம்
கற்றைக் குழல் ஜானகியின் தனியுருவம் ?
இல்லை --
அட்டைக் கருப்பில்
நீல மசி தோய்த்து, நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்பிகிறேன்
தேடிப் புரிந்து கொள்.

==========================================
v டெலிபோன் துடைப்பவள் :


இன்றைக்கு செவ்வாய்க் கிழமை
நிலா பகலில் வரும்
ஆகவே லேசாய்க் கிளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பியே நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
என்றைக்குச் செவ்வய்க் கிழமை

======================================

v விடலைகள் :


துள்ளித் துவண்டுத் தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்
=======================================
v நகரம் :

பறவைகள் அடையும் பெருமரங்கள் வீழ்ந்து
மனிதர்கள் அடையும் கல் மரங்கள் முளைத்த
காடு
=======================================
v தோழி :
குளத்து முதுகை கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து
அடங்கின நெஞ்சில்
ஆசைகள்
எறிந்து
ஆட்டம் பார்ப்பது அசிங்கம்
யாரும் அறியாது கெட்டிக்கரை உடைக்க
வட்டச் சிற்றலையால் முடியாது
ஓடுகால் நதியல்ல,
எறிந்ததும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.
இது குளம். சலனத்தை
சல்லாபத்தால் மறைக்கத் தெரியாத ஜடம்
பல்காட்டும் உன் பட்டணக்கரை
அலைவரிசையில் நின்று உன் வரிசை காட்டு
இடுப்பு நனைய இளித்து நில்
எழுந்து போ
என்னையும் குளத்தையும்
விட்டு.




கருத்துகள் இல்லை: