இந்த வலைப்பதிவில் தேடு

22 நவம்பர், 2011




    பாலகுமாரன் கவிதைகள் 2





  • *மெர்க்குரிப் பூக்களிலிருந்து ---
    இடுப்பை விட்டு எங்கானாலும்
    இறங்க மாட்டேன் என்கிறதாய்
    அவளின் நினைப்பை இடுக்கி கொண்டு
    அடங்கள் செய்யுது மனக் குழந்தை

    தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி
    பறவைகள் போகுது பாரென்றால்
    கண்ணை விரித்துக் கணங்கள் தயங்கி
    மீண்டும் தாவுது அவளுக்காய்

    அதட்டிப் பார்த்து அன்பாய் சொல்லி
    அசிங்கம் என்பினும் பயனில்லை
    இறுக்க அவளை இடுக்கிக் கொண்டு
    ஜொள்ளை உரியுது மனக்குழந்தை.
    ==============================






  • வெப்பம் :

  • நீரோடு கோலம் காணா நிலைப்படியும்
    நெளிந்தாடு சேலை இல்லாத் துணிக் கொடியும்
    மலர விட்டுத்தரை உதிர்க்கும் பூச்செடியும்
    வாளியும் கிணற்றடியும்
    கைப்பிடிச் சுவரும்
    வரளுகின்றன – என்னைப் போல்
    அவளில்லா
    வெறுமையில்

    ==============================






  • வடு :-
    அம்மா இழுத்த சூடும்
    அப்பா இறைத்த வசவும்
    இன்னுமிருக்கின்றன –
    என்னில்
    பசுமையாய் –
    நடுமரத்தில் நம் பெயரை
    நீ செதுக்கின வடு மாதிரி
    நீயோ –
    மரம் மாதிரி
    ==============================






  • ஸ்னேகிதம் :-
    நேற்று நீ மறந்து போனாய்
    போகையில் முத்தம் கொடுக்க
    மறுபடி மறுபடி நெஞ்சில்
    இக்குறை வந்து தாக்க
    பூக்களை முத்தமிட்டேன்
    புற்களை முத்தமிட்டேன்

    காகிதம்,பேனா,பென்சில்
    கடக்கின்ற காற்று, கை விரல்
    ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்.

    நேற்று நீ மறந்து போனாய்
    ஊர் முழுக்க ஸ்னேகிதமாச்சு
    திடுமென்று நினைவு மின்னி
    மறுபடி எனைப் பார்க்க வந்தாய்

    உன் பக்க கணக்கு முழுவதும்
    வெட்கமின்றி சொல்லுவாயோ.

    - பாலகுமாரன்






ஆனந்த வயல் நாவலிலிருந்து சில வரிகள் ....
ரணம் பட்ட புலியிடம் வேதகோஷம் எடுபடாது. எதிர்த்து அடிக்கத்தான் செய்யும். மனிதன் சகல நேரமும் நல்லவனில்லை. இருத்தல் கடினமும் கூட. அவன் நெஞ்சடியில் எப்போதும் ஒரு மிருகம் உண்டு. அந்த மிருகத்துக்கு குரோதம் என்று பெயர். காமத்தால் மட்டும்,காமம் என்று அழைக்கப்படுகிற ஆசையால் மட்டும் குரோதம் வருவதில்லை. அவமானமும் குரோதம் வளர்க்கும். மான,அவமானமற்று நிற்பது பெருஞ்செயல், ஞானிகளுக்கு உண்டான விஷயம். ரத்தத்திற்கு ரத்தம்,உயிருக்கு உயிர், பழிக்குப் பழி மனித சமுதாயத்தில் காலம் காலமாய் வரும் விஷயம். உள்ளே இருக்கும் அகக்கண் மூட, காலத்தின் தொலைவு தெரியாது போகும். நாலு நாட்கள் கழித்து இப்படி ஒரு செயல் நானா செய்தேன் என்கிற நினைப்பு வந்தாலும் செயல் நடத்த வேண்டிய நேரத்தில் சிந்தனை மழுங்கி நிற்கும் வாய்ப்பே அதிகம்.
****************************************

கருத்துகள் இல்லை: