கமலஹாசன் கவிதைகள்
மனித
வணக்கம்
தாயே,
என் தாயே!
நான்
உரித்த
தோலே
அறுத்த
கொடியே
குடித்த
முதல் முலையே,
என்
மனையாளின்
மானசீகச்
சக்களத்தி, சரண்.
தகப்பா,
ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது
கவிதைகளாய் இன்று
புரியாத
வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை
நான் சொல்லுகின்றேன்.
தமயா,
ஓ தமயா!
என்
தகப்பனின் சாயல் நீ
அச்சகம்
தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள்
வெவ்வேறு!
தமக்காய்,
ஓ தமக்காய்!
தோழி,
தொலைந்தே போனாயே
துணை
தேடி போனாயோ?
மனைவி,
ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான்
தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின்
சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே,
ஓ மகனே!
என்
விந்திட்ட விதையே
செடியே,
மரமே, காடே
மறுபிறப்பே
மரண
சௌகர்யமே, வாழ்!
மகளே,
ஓ மகளே!
நீயும்
என் காதலியே
எனதம்மை
போல..
எனைபிரிந்தும்
நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த
கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா,
ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான்
செய்த அன்பின் பலன்
இவ்விடமும்
அவ்விதமே.
பகைவா,
ஓ பகைவா!
உன்
ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக்
கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின்
விளம்பரங்கள்.
மதமென்றும்,
குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி
விடும்
நிர்வாணமே
தங்கும்.
வாசகா,
ஓ வாசகா!
என்
சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால்
புன்னகை செய்.
புதிரென்றால்
புருவம் உயர்த்து.
பிதற்றல்
எனத்தோன்றின்
பிழையும்
திருத்து.
எனது
கவி உனதும்தான்.
ஆம்,
நாளை
உன் வரியில் நான் தெரிவேன்
கவிதைநூல்
வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை
இது