இந்த வலைப்பதிவில் தேடு

17 ஜனவரி, 2021

"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

கடலோரக் கவிதைகள் 
திரைப்படப் பாடல் ஒலிநாடாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளை      பாரதிராஜா தன் குரலில் வாசித்த கவிதைகள்


உன்னைப் பார்த்த பிறகுதான்
நான்
என் தோட்டத்தில்
பூச்செடிகள்
வைக்க ஆரம்பித்தேன்

என் வாழ்க்கைக்குள்
தென்றலாய்
நீ வந்த பிறகுதான்
நான்
திறக்க மறந்த
ஜன்னல்களையெல்லாம்
திறந்து வைத்தேன்

இது என்ன நியாயம்?
எனக்கு 
சுவாசிக்கக் கற்றுக்
கொடுத்து விட்டு
காற்றே !
உன் திசையை
இப்போது
ஏன் திருப்பிக் கொண்டாய் ?

இருண்டு கிடந்த
என் மனதில்
விளக்கேற்றினாய் !
இப்போது
என் கண்களையே
களவாடிக் கொண்டாயே !
என் கண்கள் தான்
நீ ஏற்றிய
விளக்குக்கு விலையா?

ஏன் பைங்கிளியே !
நீ
எவ்வளவுதான்
பறந்தாலும்
வானத்தின் விளிம்பிற்கு
வெளியே போக முடியாது
கிளியே !


காதல் -
ஒரு ரகசிய மழை
பாலைவனங்களையெல்லாம்
பிருந்தாவனங்களாக்கி விடுகிறது.

காதல் நதி
மனமெங்கும்
கலகலவென்று பரவும் போது
அது 
கரும்பாறைகளைக் கூட
கரைத்து விடுகிறது
இதுதான் காதலா?

மனதுக்குள்
இப்படி ஒரு
மாயப் பிரவேசம் இருக்கிறதா?

ஏ காதலே !
ஒரே நாளில்
உடம்பெல்லாம்
லட்சம் சிறகுகளை முளைக்க
       வைத்து விட்டாயே !

நீ போட்ட மந்திரத்தில்
எந்திரத்திலெல்லாம்
பூ பூக்க ஆரம்பித்து விட்டதே !


நிறைவேறிய காதல்
வார்த்தையாகிறது !
நிறைவேறாத காதல்
கவிதையாகிறது !

காதல் -
வார்த்தைகளை விட
மெளனத்தையும்
கண்ணீரையும்தான்
அதிகமாக நேசிக்கிறது !

காதல் -
தன்னைப் பேசுவதில்லை
அதனால்தான்
அது பேசப்படுகிறது.
அதோ !
அவனது தோட்டத்தில்
மழை பொழிய வந்த மேகம்
இடியை மட்டும்
இறக்கி விட்டுப் போய்க்
கொண்டிருக்கிறது


எல்லா மொழியிலும்
அதிகமாக எழுதப்பட்ட
வார்த்தை
காதல் தான் !
ஆனால்
எல்லா தேசங்களிலும்
தடை செய்யப்பட்ட
சொல்லும்
காதல் தான் !
சொல்லப்படாத கவிதை
மொழியின் நஷ்டம் !
சொல்லப்படாத காதல்
சொர்க்கத்துக்கே நஷ்டம் !
ஏ பேதைப் பெண்ணே' !
நீயாவது சொல்லி விடேன்

காதலையும்
கர்ப்பத்தையும்
மாராப்புப் போட்டு
ஏன்
மறைக்கப் பார்க்கிறாய் ?


கருத்துகள் இல்லை: