இந்த வலைப்பதிவில் தேடு

17 ஜனவரி, 2021

"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்


அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்


கண்ணே !

நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.


ஊர் ஒடுங்கி விட்டது !
பிறை நிலவு 
தன் மெளனத்தை மறைக்க
முகிலை இழுத்து 
முக்காடு போட்டுக் கொள்கிறது!

நட்சத்திரங்களை 
காவலுக்கு வைத்து விட்டு 
இரவு கூட உறங்கி விட்டது
நீ மட்டும் உறங்கவில்லை.!


நீ இமைக்கும் சப்தம் தான்
எனக்குக் கேட்கிறதே!
என் இதயத் துடிப்பு
உனக்குக் கேட்கிறதா?


வெளியே வா கிளியே !
என் இமைகளும், விழிகளும்
ஒரு உடன்படிக்கைக்கு வராமல்
அடம் பிடிக்கின்றன !

இன்று நீயும், நானும்
சந்திக்கா விட்டால்
இந்த இரவு
ஒரு பகலைச் சந்திக்காமலேயே
போய் விடும் !

உன்னை எண்ணி உள்ளம் வாடும் 
கண்கள் இரண்டும் சண்டை போடும்

முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?

இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?

அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?

உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?

கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது

இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது

கருத்துகள் இல்லை: