இந்த வலைப்பதிவில் தேடு

5 ஜனவரி, 2021

வான் நிலா நிலா அல்ல - நான் ரசித்தபாடல் வரிகள்

வான் நிலா நிலா அல்ல - 
நான் ரசித்தபாடல் வரிகள்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" என "தான், தான் " என முடியும் வகையில் ஒரு பாடலை இயற்றினார்.

அதையொட்டி  கவியரசரும் அதே போல் " தான், தான்"  என முடியும் வகையில் "அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத் தான் "
என்ற பாடலை எழுதினார்.
இன்னொரு பாடல் கூட "தேன், தேன்" என முடியும் வகையில் "பார்த்தேன், சிரித்தேன்.
பக்கத்தில் அழைத்தேன்" கவியரசரால் எழுதப்பட்டது.


அதே வரிசையில் "நிலா" என்ற சொல்லை உபயோகித்து பட்டினப்பிரவேசம் படத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார்.

"வான் நிலா, நிலா அல்ல" என்ற இந்தப் பாடலை நாமும் பல முறை கேட்டிருப்போம்
இன்று நான் பயண நேரத்தில் மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலை சுவைக்க வாய்ப்புக் கிடைத்தது

இந்தப் பாடல் வெறும் வார்த்தைத் தோரணங்கலல்ல.

நிலா, நிலா என சொற்களை இட்டுக்கட்டி நிரப்பியதல்ல.

எளிமையான சொற்களால் அலங்கரித்து  பாடல் மெட்டுக்கு கவிஞர் உயிர் கொடுத்திருக்கிறார்

கேள்விக்கணைகள் தொடுத்து சிந்தனைகளை தூண்டிப் பார்க்கிறார்

பல முறை இந்தப் பாடலை செவி வழியே கேட்டிருக்கலாம்.
விழி வழியே பார்த்தும் ரசித்திருக்கலாம்
ஆனால் வரி வரியாய் படித்திருக்க மாட்டீர்கள்.
இப்போ படித்துப் பாருங்கள்
ரசித்துப் படியுங்கள் 

இனி பாடல் வரிகள்

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..

நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

(மானினுடைய கண் விசேஷமானது.
பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கண்களை மான் விழி என்று உவமை காட்டியிருக்கிறார்கள்.
இங்கு கவிஞரும் அப்படியே வர்ணிக்கிறார்
).

பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(அழகில் மலரையொத்தவள் பெண் என்பதை கவிஞர் இப்படிக் கூறுகிறார்).

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

(இனி கேள்விகளாய் பாடல் வரிகள் தொடர்கிறது.
தெய்வம் எங்கே இருக்கிறது? என்று வரிசைப்படுத்துகிறார்)

தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?

பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?

(இன்பம் எதுவெனக் கேட்கிறார்)

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

தீதில்லா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

(வாழ்க்கை என்பது எது? என கேட்கிறார்)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?

(ஆனந்தம் எங்கே உள்ளது? எனக் கேட்கிறார்)

ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?

(சொந்தம் எங்குள்ளது? என வினவுகிறார்)

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா
!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா...
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாடல் இடம்பெற்ற படம்:- பட்டினப் பிரவேசம் - (1977);
இசையமைத்தவர்:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்;
பாடியவர்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்;
இயற்றியவர்:- கவியரசர் கண்ணதாசன்;


வீடியோவில் இப்பாடலைக் காண :


கருத்துகள் இல்லை: