இந்த வலைப்பதிவில் தேடு

25 ஜனவரி, 2021

கமலஹாசன் கவிதைகள்

கமலஹாசன் கவிதைகள்


மனித வணக்கம்

தாயே, என் தாயே!

நான்

உரித்த தோலே

அறுத்த கொடியே

குடித்த முதல் முலையே,

என் மனையாளின்

மானசீகச் சக்களத்தி, சரண்.

 

தகப்பா, தகப்பா!

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று

புரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

 

தமயா, தமயா!

என் தகப்பனின் சாயல் நீ

அச்சகம் தான் ஒன்றிங்கே

அர்த்தங்கள் வெவ்வேறு!

 

தமக்காய், தமக்காய்!

தோழி, தொலைந்தே போனாயே

துணை தேடி போனாயோ?

 

மனைவி, காதலி!

நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக்குமைந்திடுவாய்

சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

 

மகனே, மகனே!

என் விந்திட்ட விதையே

செடியே, மரமே, காடே

மறுபிறப்பே

மரண சௌகர்யமே, வாழ்!

 

மகளே, மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை,

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

 

நண்பா, நண்பா!

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்

இவ்விடமும் அவ்விதமே.

 

பகைவா, பகைவா!

உன் ஆடையெனும் அகந்தையுடன்

எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே

உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

 

மதமென்றும், குலமென்றும்

நீ வைத்த துணிக்கடைகள்

நிர்மூலமாகி விடும்

நிர்வாணமே தங்கும்.

 

வாசகா, வாசகா!

என் சமகால சகவாசி,

வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத்தோன்றின்

பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

 

ஆம்,

நாளை உன் வரியில் நான் தெரிவேன்

 கோவை வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்களின்

கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை இது


திரைப்படம் பேசினால்
அரசியல் தெரியாதோ என்பீர்!


அரசியல் பேசினால்
ஆறடி தள்ளி நிற்பீர்!


மொழிப்பற்று கொண்டால்
ஆங்கிலம் புரியாதோ என்பீர்!


ஆங்கிலம் பேசினால்
படித்த திமிர் என்பீர்!


பகுத்தறிவு பேசினால்
கடவுள் பிடிக்காதா என்பீர்!


கடவுள் நம்பிக்கை கொண்டால்
கர்னாடகம் என்பீர்!


சகோதரத்துவம் சொன்னால்
நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!


ஜனநாயகம் பேசினால் நாட்டின்
இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!


காதல் பிடிக்காதென்றால்
ஆண்மையில் ஐயம் கொள்வீர்!


காமம் பற்றி பேசினால்
காதுகளைப் பொத்திக்கொள்வீர்!


மெய்ஞ்ஞானம் பேசினால்
விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!


விஞ்ஞானம் பேசினால்
விலகித் தள்ளி நிற்பீர்!


ஓடி ஓடி உழைத்தாலும்
பணத்தாசை பிடித்தவன்!


பொருள் வேண்டாமென்றாலும்
பிழைக்கத் தெரியாதவான்!


எதிர்த்துப் பேசினால்
அதிகப்பிரசங்கி!


பேசாமலிருந்தால்
கல்லுளிமங்கன்!


எத்தனை கடினம் இவ்வுலகில்
நான் நானாய் வாழ்வதில்.....!!!!


- பத்ம ஸ்ரீ கமலஹாசன்
( காண்செவிக் குழுவில் வந்தது )





கருத்துகள் இல்லை: