இந்த வலைப்பதிவில் தேடு

25 அக்டோபர், 2018

மழைக்காலப் பூக்கள் - கவிப்பேரரசு. வைரமுத்து





















மழைக்காலப் பூக்கள் :

அது ஒரு
காலம் கண்ணே
கார்காலம் !
நானும் நீயும்
நனைந்து கொண்டே
நடக்கிறோம்
ஒரு மரம் !
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருக்கிருந்தது


இருந்தும்
அந்த
ஒழுகுங்குடையின் கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதி வைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக் கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது


இலைகள்
தண்ணீர்க் காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன்
நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப் பாதையில்
ஓடிக் கொண்டிருந்தன !


அந்தி மழைக்கு நன்றி !


ஈரச்சுவாசம்
நுரையீரல்களின்
உட்சுவர்களில்
அமுதம் பூசியது
ஆயினும் – நான்
என் பெருமூச்சில்
குளிர்காய்ந்து கொண்டிருந்தேன்


நம்
இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது
எவ்வளவோ பேச
எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊர்வலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன் முகப்பூவில்
பனித்துளியாகிவிடும்
 இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத் தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும்
கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ
நீட்டினாய்
நான் கேட்டேன்
“இந்தக் கைக்குட்டை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக் கூடாதா?"
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என்
இதயத்துக்குள் பெய்தது
அது ஒரு
காலம் கண்ணே !

கார் காலம்.


14 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள் - 2

நான் ரசித்த கவிதைகள்   

ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள் - 2 

 

பட்டப் பகலிலேயே
வீட்டில்
முகமூடிகளின் கொள்ளை !
கதறிய நான்
கடவுளிடம்
முறையிட்டேன்....
கடவுளும் கதறினார்
"என் கோயிலிலும்
கொள்ளை" என்று !
-  ஓடுவெட்டி சொல்லழகன்,
                    ஜமீன் எண்டத்தூர்.

'தனிக் கட்சி
தனிக் கட்சி' 
என்று எகிறிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ க்களிடம்
எஸ்.டி.எஸ் முகவரி கேட்டு
எதிரில் வந்தான் 
போஸ்ட் மேன்
"சகுனம் 
சரியில்லை' என்று 
வழிந்தோடிய
கண்ணீரைத் 
துடைத்தபடி
ஓடினார்கள்
'கட்சிப் பணிக்கு'
- நெல்லை .ப . பழனிராஜ்
                          கரையிருப்பு
(எம் ஜி ஆர் தனது அமைச்சரவையிலிருந்து எஸ் டி எஸ் அவர்களை நீக்கம் செய்த போது எழுதப்பட்ட கவிதை)

 

நான் ரசித்த கவிதைகள் - ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள்

 நான் ரசித்த கவிதைகள்   

ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள்

காணவில்லை :

கணவரைக்
காணவில்லை என்று
காவல் நிலையம் சென்ற
பெண்ணின்
கற்பைக்
காணவில்லை!
கண்டு பிடித்தால்
அருகில் உள்ள
காவல் நிலையத்துக்குத்
தெரிவிக்கவும்

- S. மாயராஜ், மதுரை.

தமிழக அரசின் அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் 

நீக்கம் செய்யப்பட்ட போது வெளியான கவிதைகள் :


தமிழக 
முதல்வரின்
ஜவுளிக் கடையில்
தற்போதைய
தீபாவளி
தள்ளுபடி -
'பத்து' பர்சண்ட் 
- தி.பாலசுப்ரமணியன்
                 சுவாமி மலை


23 சைபரிலே
10 சைபர் போச்சு....
மீண்டும் 
1 சைபர் சேர்த்ததாலே
என்ன தான் ஆச்சு?
கூட்டிக் கழிச்சுப் பார்த்ததிலே
குழப்பமாகிப் போச்சு - நம்ம
தமிழகத்தின் மதிப்பு இப்ப
என்னதான் ஆச்சு?

- V.முரளிதரன், சென்னை.

பட்டுப்புடவை,
பட்டாசுகளின் விலை,
பாமாயில் பற்றாக்குறை,
தலை தீபாவளியைக் காசாக்கும்
மாப்பிள்ளைத் தரகர்கள்
முன்பணம் வாங்கியும்
முடியாத போது
சே ! ....பேசாமல்
நரகாசுரனே ஜெயித்திருக்கலாம் !

- பத்மப்ரியா, சென்னை

நான் ரசித்த கவிதைகள் - நீலமணி கவிதைகள்

நான் ரசித்த கவிதைகள்  
நீலமணி கவிதைகள்
தீண்டாமை :

ராமர் தடவி
அணில் கோடு பெற்றதேல்
சீதையைத்
தொட்டதே இல்லையா?

அழைப்பு :
 நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன;
வாயேன்.

...................

காபரேக்காரியைக்
கட்டிக் கொண்டேன்
மியூஸிக் இன்றி
அவிழ்க்க மறுக்கிறாள்
கர்பி ஹட்டே ஏ....வ், ஒரு
சோடா கொண்டாய்யா.


பர்ஸ்ட் வ்யூ:
இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு 
புதிய லெட்ரின்கள் 
- நீலமணி

நான் ரசித்த கவிதைகள் - நா.விச்வநாதன் 2

நான் ரசித்த கவிதைகள்

நா.விச்வநாதன் 2

ஊர்க் கவிதை :

எதிரே வந்த
ஒற்றைப் பிராமணனை
சபித்து விட்டு
ஒரு வாய் நீரருந்தி
சகுனத்தை சரியாக்கிக்
கிளம்புவாள்
ஒரு பாப்பாத்தி -

மாட்டுத் தொழுவத்தைக்
கூட்ட வந்த
வேலைக்காரியின்
கணநேரக் கோணத்தில்
கிளர்கின்ற தீட்சதருக்கு
ஆசாரம் மறந்து போய்
விரிகின்ற
நினைவையெல்லாம்
அம்மாவின் ஆஸ்த்மா
கலைந்து விடும் சோகமாய் -
.....
 
 
அப்பாவின்
மிரட்டலுக்குப் பயந்து
விடுமுறையை - கிராமத்து
ஒட்டுத் திண்ணையில்
கழிக்க வந்த கவியொருவன்
பட்டணத்து
கனவுகளுக்காய்  ஏங்கி
வெறிக்க வெறிக்க
வானம் பார்க்கும் -
சில
கவிதைகள்
செத்துப் போக .

- - - - - -
கதவுகள் :

எங்களூர் அக்ரகாரத்தில்
அதிசயங்கள்
ஆயிரம் உண்டு

செம்மண் பட்டையிட்டு
செங்காவி செறிவீச்சில்
கொலுவிருக்கும்
வீடுகளின் ஜன்னல்களுக்கோ
கதவுகளே இல்லை.
ஆனால் -
டெர்ரிகாட் பளபளப்பில்
குதிகால் நடையுயர்த்தி
நட்ட நடுத்தெருவில்
நீள நடந்தால் -
கருப்பு சிவப்பு பழுப்பு
மாநிறப் பரபரப்பு
முகங்கள்
கதவுகளாய் முளைக்கும்

.......

அவன்:
பத்துத் தலை ராவணனுக்கு
எங்களூரில்
கைகளும் இருபதுதான்.

வீரமிது
கற்பும் இதுவுமென்று
இலக்கணம் செய்தவனும்
வேதங்கள் பிளந்தவனும்
கண்டவனும்
கண்டு கடவுளை
விண்டவனும் அவன்தான்

இருபது கைகள் தாவும்
இருநூறு இடமாம்
பத்து தலைகள்
பார்த்து நுழைவதோ
இடம் பதினாயிரமாம்

அதனால்
ராவணனை எதிர்த்து
நிற்கும்
ராமனுமில்லை
ஊரில்
ராவணனை வெறுத்தொதுக்கும்
சீதைகளுமில்லை.
........
 
- நா.விச்வநாதன்

 

 


12 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - நாவிச்வநாதன்

நாவிச்வநாதன்
"சுதந்திரம்" நூலிலிருந்து


முள் :

இருட்டு முயக்கில்
நெருஞ்சி குத்தாமல்
நடந்த நடையென்ன?
திருட்டு முயக்கில்
பவள நிறத்து
பாலீஷ் மழுங்கிய
நகமுள் குத்தியது
- நெஞ்சில் சுகமென்ன ?

________
அவனுக்கு அடையாளம்:

இருட்டுக்குள் தெறிக்கும்
ஒளிக்குரலை
யாரது என்றேன்
மனிதன் மனிதன்
என்று அழுத்திச் சொன்னாலும்
மறுப்பேன்
வெளிச்சத்தில்
இருட்டை ஊடுருவும்
என் கண்களின்
பலத்தைத் தொலைத்தபின்னே
இருட்டுக்குள்
மனிதனைப் புரிவதில்லை.

வேண்டுமானால்
அழுது காட்டு
புரிந்து விடும்.
_____________

மீறல் :
தினமும்
முச்சந்திப் பிள்ளையாருக்கு
விளக்குப் போடப் போவதில்
கிளைக்கும் நம்பிக்கைகள்.

புதிதாகத் தாலி கட்டிக்
கொண்ட
சின்னச் சினேகிதி
கன்னச் சிவப்பு
விவரித்துச் சொன்ன
கற்பனைகள்

கவலைகளை உதறி விட்டு
ரிஷியாகி விடத்
துடிக்கும் அப்பாவை
ஒரு
செவ்வாய் தோஷத்திற்காக
அலையச் சொல்லி
நச்சரிக்கும்
அம்மாவின் அவசரங்கள்..

எதிர் வீட்டுக் கிழம்
பாட்டியில்லாத
நேரங்களின்
வெந்நீர் போட்டுத் தர
வரச் சொல்லும்
சோகங்கள்

கடைசியில்
பெண்கள் படித்துறையில்
தன்னை
ஒளிந்திருந்து பார்க்கும்
ஒரு ஜோடி
விடலைக் கண்களின்
தாகம்
தீர்க்கும்
அவசரத்தில் --
மீறல்தான்
சாத்தியமாம்


வழிகள் :

நடைபாதைக் 
கிளிகளிடம்
சேதி கேட்டு நிற்கும்
சோகத்தில்
முனகல் வாய்ப்பாடு
மறந்து போகாது
கேட்பதை விட 
கிளிகளைத் திறந்து விடு...
பறந்து போகும்....
சில சேதிகளைச்
சொல்லிவிட்டு.

நான் ரசித்த கவிதைகள் - தாய் இதழில் வந்தவை

நான் ரசித்த கவிதைகள்  

தாய் இதழில் வந்தவை



 சுவாசித்த குற்றம் :

நீதிமன்றத்தின்
புழுக்கம் தாளாமல்
நீதி தேவதை ஒரு நாள்
காற்று வாங்கக்
கடற்கரை சென்றாள்
திரும்பவும் அவன்
நீதிமன்றத்தில்
           நுழைத்த போது
வாயிற் காவலன்
வழிமறித்தான்
அந்நியர்கள் உள்ளே
பிரவேசிக்கக் கூடாது
______

வேண்டுகோள் :

தையல்காரியே....
தையல்காரியே....
கிழிந்திருக்கும்
உன் மேலாடையை
சீக்கிரம் தைத்து விடு
எதிர் வீட்டிலிருக்கும்
என் இதயம்
கந்தல் கந்தலாய்க்
கிழிந்து கொண்டிருக்கிறது.

புரிதல் :
நான் முத்தெடுக்க
மூழ்கினேன்
உன் மனம்
புதைமணல் என்பதைப்
புரிந்து கொள்ளாமல்

______

இமையுதிர் காலம் :
உன்னைப் பாராத
தினங்கள்
நாட்காட்டியில் இருந்து
உதிர்கின்றன.
இமைகளில் இருந்து
உதிர்கிற
கண்ணீர்த் துளிகளாக .

நீல மொட்டுக்கள்
நீர்த்துப் போன தாள்கள் :
- பிருந்தா சாரதி

8 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - நா.காமராசன்



_______

சூரிய சந்திர நாடகம்:

உன் முகத்தைப் பார்த்து விட்டு
மலர்களைப் பார்த்தால்....
வசந்த காலம் செத்துப்
பிறந்தது போல் தெரிகிறது.

கனவிலே சிரித்து
விழிக்கும் போது அழும்
குழந்தையைப் போல....
உன்னைக் கண்டு மரியும்
மனம் தவிக்கும்
......

       
 உன் முகம் மணக்கும் போது
உலகின் எல்லா நறுமணல்களும்
ஆவியாகுமோ?
மே மாதப் பூவைத் தொடும்
காற்றைப் போல்
உன் பார்வை
என் மனத்தைத் தொடுகிறது

அல்லி மலர்க் கண்கள்
பேசும் ரோஜா உதடுகளைப்
பார்க்கின்றன

- ஆப்பிள் பசி
நா.காமராசன்



நான் ரசித்த கவிதைகள் - சி.மணி, ரவி சங்கர், ஜமீலா