நான் ரசித்த கவிதைகள்
நா.விச்வநாதன் 2
ஊர்க் கவிதை :
எதிரே வந்த
ஒற்றைப் பிராமணனை
சபித்து விட்டு
ஒரு வாய் நீரருந்தி
சகுனத்தை சரியாக்கிக்
கிளம்புவாள்
ஒரு பாப்பாத்தி -
மாட்டுத் தொழுவத்தைக்
கூட்ட வந்த
வேலைக்காரியின்
கணநேரக் கோணத்தில்
கிளர்கின்ற தீட்சதருக்கு
ஆசாரம் மறந்து போய்
விரிகின்ற
நினைவையெல்லாம்
அம்மாவின் ஆஸ்த்மா
கலைந்து விடும் சோகமாய் -
.....
அப்பாவின்
மிரட்டலுக்குப் பயந்து
விடுமுறையை - கிராமத்து
ஒட்டுத் திண்ணையில்
கழிக்க வந்த கவியொருவன்
பட்டணத்து
கனவுகளுக்காய் ஏங்கி
வெறிக்க வெறிக்க
வானம் பார்க்கும் -
சில
கவிதைகள்
செத்துப் போக .
- - - - - -
கதவுகள் :
எங்களூர் அக்ரகாரத்தில்
அதிசயங்கள்
ஆயிரம் உண்டு
செம்மண் பட்டையிட்டு
செங்காவி செறிவீச்சில்
கொலுவிருக்கும்
வீடுகளின் ஜன்னல்களுக்கோ
கதவுகளே இல்லை.
ஆனால் -
டெர்ரிகாட் பளபளப்பில்
குதிகால் நடையுயர்த்தி
நட்ட நடுத்தெருவில்
நீள நடந்தால் -
கருப்பு சிவப்பு பழுப்பு
மாநிறப் பரபரப்பு
முகங்கள்
கதவுகளாய் முளைக்கும்
.......
அவன்:
பத்துத் தலை ராவணனுக்கு
எங்களூரில்
கைகளும் இருபதுதான்.
வீரமிது
கற்பும் இதுவுமென்று
இலக்கணம் செய்தவனும்
வேதங்கள் பிளந்தவனும்
கண்டவனும்
கண்டு கடவுளை
விண்டவனும் அவன்தான்
இருபது கைகள் தாவும்
இருநூறு இடமாம்
பத்து தலைகள்
பார்த்து நுழைவதோ
இடம் பதினாயிரமாம்
அதனால்
ராவணனை எதிர்த்து
நிற்கும்
ராமனுமில்லை
ஊரில்
ராவணனை வெறுத்தொதுக்கும்
சீதைகளுமில்லை.
........
- நா.விச்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக