இந்த வலைப்பதிவில் தேடு

12 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - நாவிச்வநாதன்

நாவிச்வநாதன்
"சுதந்திரம்" நூலிலிருந்து


முள் :

இருட்டு முயக்கில்
நெருஞ்சி குத்தாமல்
நடந்த நடையென்ன?
திருட்டு முயக்கில்
பவள நிறத்து
பாலீஷ் மழுங்கிய
நகமுள் குத்தியது
- நெஞ்சில் சுகமென்ன ?

________
அவனுக்கு அடையாளம்:

இருட்டுக்குள் தெறிக்கும்
ஒளிக்குரலை
யாரது என்றேன்
மனிதன் மனிதன்
என்று அழுத்திச் சொன்னாலும்
மறுப்பேன்
வெளிச்சத்தில்
இருட்டை ஊடுருவும்
என் கண்களின்
பலத்தைத் தொலைத்தபின்னே
இருட்டுக்குள்
மனிதனைப் புரிவதில்லை.

வேண்டுமானால்
அழுது காட்டு
புரிந்து விடும்.
_____________

மீறல் :
தினமும்
முச்சந்திப் பிள்ளையாருக்கு
விளக்குப் போடப் போவதில்
கிளைக்கும் நம்பிக்கைகள்.

புதிதாகத் தாலி கட்டிக்
கொண்ட
சின்னச் சினேகிதி
கன்னச் சிவப்பு
விவரித்துச் சொன்ன
கற்பனைகள்

கவலைகளை உதறி விட்டு
ரிஷியாகி விடத்
துடிக்கும் அப்பாவை
ஒரு
செவ்வாய் தோஷத்திற்காக
அலையச் சொல்லி
நச்சரிக்கும்
அம்மாவின் அவசரங்கள்..

எதிர் வீட்டுக் கிழம்
பாட்டியில்லாத
நேரங்களின்
வெந்நீர் போட்டுத் தர
வரச் சொல்லும்
சோகங்கள்

கடைசியில்
பெண்கள் படித்துறையில்
தன்னை
ஒளிந்திருந்து பார்க்கும்
ஒரு ஜோடி
விடலைக் கண்களின்
தாகம்
தீர்க்கும்
அவசரத்தில் --
மீறல்தான்
சாத்தியமாம்


வழிகள் :

நடைபாதைக் 
கிளிகளிடம்
சேதி கேட்டு நிற்கும்
சோகத்தில்
முனகல் வாய்ப்பாடு
மறந்து போகாது
கேட்பதை விட 
கிளிகளைத் திறந்து விடு...
பறந்து போகும்....
சில சேதிகளைச்
சொல்லிவிட்டு.

கருத்துகள் இல்லை: