இந்த வலைப்பதிவில் தேடு

30 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள்

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள் 

அழகென்று
சிறப்பாய் 
எதுவுமில்லை
பிடித்தவர்களின்
கண்களுக்கு முன்னே..
யாவும் அழகே.
- நீர்ப்பறவை@pithamagal


வாரப் பத்திரிக்கைகளில் வந்த கவிதைகள் (1989)

வாரப் பத்திரிக்கைகளில் 

வந்த கவிதைகள் (1989)

தராசு முள்:

இரண்டு
பொண்டாட்டிகளின்
இடையினில் சிக்கி
இழுபடும்
இளிச்சவாயன்

 -      எஸ். கணேஷ் குமார்

 

என் குறை சொல்ல
கோட்டைக்குப் போனேன்
அங்கே அமைச்சர்கள் இல்லை
வெளிநாட்டுப் பயணமாம் !
 
கோவிலுக்குப் போனேன்
தெய்வத்தைப் பார்க்க
அங்கே சிலை இல்லை.
அதுவும் –
வெளிநாட்டுப் பயணமாம் !

-      கடுவை கோபால்சாமி

 


ஒரு ராமன்தான்
வரவில்லை
எங்கள் வீட்டு
ஜன்னல் வில்லை
ஒடித்து –
அழும் என்னை
மீட்க
அட ஒரு
இராவணன் கூடவா
இல்லை ?
என்ன
சிறையெடுக்க !

-      லட்சுமி பிரகலாதன்

ராமனென்ன
அடுத்த அவதாரம்
கோகுலத்தில்
என்று
உறுதியளித்தால்
நான் கூட
ஏக பத்தினி
விரதன்தான் !

-      தாராபுரம் P.R.C பாலு

 

பேருந்து நடத்துனர்கள்:

தினம் தினம்
LIC ஐ
60 பைசாவுக்கும்
எக்மோரை
70 பைசாவுக்கும்
விற்றுக்கொண்டிருக்கும்
விற்பனையாளர்கள்

-      ரத்னம் – வாசு

 

இலக்கண வகுப்பில்
தமிழாசிரியர்
தலையில் குட்டினார்
‘அடி, தொடை, தெரியாமல்
இருக்கிறாயே? 
உருப்படுவியா?”
திருமணம் முடிந்து
ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அடியெனுக்கு இன்று
ஐந்து குழந்தைகள்

-      ரமணன்

 

கட்சி மாறுவதென்பது…
பட்டுப் புடவை
பத்து நாளில்
வேண்டுமென
என் நிலையறியாது
என் மனைவி புலம்புகையில்
வெட்டிச் செலவென செப்பும்
அம்மா கட்சி நான் –
 
அறுபடை வீட்டுக்கும்
ஆறு நாளில்
போக வேண்டுமென
அம்மா நச்சரிக்கையில்
அத்தனைக்கும்
அழுது தொலைக்காதீர்
அனாவசியச் செலவென
அசை போடும்
அன்பு மனைவி கட்சி நான் –
 
கட்சி மாறுவதென்பத்
எனக்கொன்றும்
புதிது அல்ல !!....!!

-பொன்.இரா.ரவீந்திரன்

 

கண்ணன் காட்டிய வழி :


பலரிடம் திருடி
ஒருத்திக்குதவி
அவன்
அனாதை ரட்சகன் ஆனான்
 
ஊரைச் சுரண்டி
வழிவிடு முருகன்
திருக்கோயிலுக்கு
குடமுழுக்காட்டி
இவன்
பெரிய தருமிஷ்டன் ஆனான்
கன்டு வட்டிக் கந்தசாமி
கண்ணன் காட்டிய வழியில்

-      மீரா (ஊசிகள்)

29 டிசம்பர், 2020

வாரப் பத்திரிக்கைகளில் வந்த காதல் கவிதைகள் (1989)

வாரப் பத்திரிக்கைகளில் வந்த  காதல் கவிதைகள் (1989)

யாசிப்பு:

அவள் வீட்டுச்
சன்னல் வழியே
பிச்சைப் பாத்திரம்
என் விழிகள் !

-      வசந்த குமாரன்

 

காதல் விடுதலை:

உன் அட்ரஸை
நான்
தெரிந்து கொண்டேன்
என் அட்ரஸை
நான்
தொலைத்து விட்டேன்

-      இதய ராஜா

 

முத்தம்:

புன்னகைப்பதற்கு
நூறு முறை
இதழ்களை விரிக்கும் நீ
முத்தமிடுவதற்காக
ஒரு முறை
குவிக்கக் கூடாதா?

-      இரா. சுந்தர மூர்த்தி

 

அன்பே..
உன்னைப் பிரிந்த நாள் முதல்
என் கைகள் முகம்
கழுவுவதில்லை
என் கண்கள்தான்
முகம் கழுவுகிறது…!

-      கலா பிரபாகர்

  


மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்…
நீ
நான்
இந்தக் கவிதை—

-      வெற்றி பேரொளி

 

கொஞ்சம் :

என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன

தோட்டத்து கலகலப்பில்
பறித்தது கொஞ்சம்

கடற்கரை ஈரத்தில்
காலடித்தடத்தில்
புரண்டது கொஞ்சம்
 
அவளின் பாதக்கொலுசுகளில்
சிந்தியது கொஞ்சம்
 
என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன
சொல்லப்படாமலேயே

-      பொன் சந்தானக்கிருஷணன்




                                   பூ:

நீயல்லவா – பூ
நானெப்படி
வாடினேன்

-      ஏ.ஆரோக்கியராஜ்

 


ஞாபகம் :

காலை தைத்த
இடத்தில் தேய்த்த
போது எறும்பு செத்தது
ஆனாலும் வலி இருந்தது
என் முதல் காதலைப் போல

-      இளங்கோராஜ்


உன்
பாதம் பதிந்த
மண்ணில்
நீர் பாய்ச்சினேன்
ரோஜாத் தோட்டமே
உருவானது

-      K.ராஜா சந்திரசேகர்

 

பெயர் :

உலகத்திலேயே
மிகப் பெரிய கவிதை
எது என்று
எனக்குத் தெரியாது
மிகச் சிறிய
கவிதை தெரியும் –
அது
உன் பெயர்.

-      K. ராஜா சந்திரசேகர்

 


உனக்கென்ன :

உனக்கென்ன
ஒரு சின்னச் சிணுங்கலை
தீப்பொறி போல
வீசி விட்டுப் போகிறாய்
பற்றிக் கொண்டு எரியும்
பஞ்சுப் பொதி
என் மனசல்லவா…?

-      K.ஜெகதீஷ்

 


ப்ரியமானவளே…
இது ஒரு
தண்ணீர் யாசகம் !
 
நீ
ஏற்றுக் கொண்டால்
நிறைந்து போவேன்

இல்லையென்றாலும்
உன் நினைவுகளில்
நினைந்து நினைந்து
கரைந்து போவேன்…
 
ஆம் –
கற்பூரம் எரிந்தால்தான்
அதன் வாசம் தெரியும்
நான் பிரிந்தால்தான்
என் சோகம் புரியும்
 
பதில்:
இந்த களர் நிலம்
உங்கள்
பார்வை மழைக்காக
காலமெல்லம்
காத்திருக்கும் !
இங்கே
புல் விளைந்தாலும்
புதல்வர்கள் விளைந்தாலும்
அது –
உங்களால் மட்டுமே !

-      பா. ராஜகோபாலன்,
மன்னார்குடி


நீ உட்கார்ந்து விட்டுப் போன
பெஞ்சில்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்து கொண்டேன்
நான் -
அப்போது
ஷாஜஹானின் மயிலாசனம் கூடத்
துரும்பாகத் தெரிகிறதடி !

- பாக்யா வார இதழிலிருந்து

கல்லறை வாசகக் கவிதைகள்

கல்லறை வாசகக் கவிதைகள்


வானொலி அறிவிப்பாளர்:

18.5.89 மீட்டரில்
இத்துடன்
இந்த அலை வரிசையில்
நிகழ்ச்சிகள்
நிறைவு பெற்றது.
 

பிரயாணி:

சைக்கிளில் தொடங்கி
ஸ்கூட்டர்,
கார்,
ஆகாய விமானம்
என வளர்ந்து
இறுதியாய் இங்கே
வந்திருக்கிறான்.
 

ஆராய்ச்சியாளர்:

இப்பொழுது
மரண ஆராய்ச்சி
நடத்துகிறார்
 

சீட்டாடும் சூதாட்டக்காரன்:

சீட்டைப் போடு
சீட்டை எடு என்றவர்
போட்டார்
மற்றவர்
எடுத்தனர்
 

விலைமாது :

உடலை முழுக்கச் செவியாக மாற்றிவிடும்
போதைப் புல்லாங்குழல் – இங்கு
புதைக்கப்பட்டுள்ளது
இங்குதான் இவள்
பணம் வாங்காமல்
பள்ளி கொள்கிறாள் 

-      மு.மேத்தா (ஊர்வலம்)

மருத்துவச்சி

பிற சவம் 
பார்க்கிறாள்

நடிகன்:

நிழலாய் நடிக்க
ஒத்திகை பார்த்தவன்
ஒத்திகையின்றி
நிஜமாய் இறந்தான்
 

மயானம் :

செல்லாத காசுகள்
சேகரிக்கப்படும்
உண்டியல்
 
உதவாத குப்பைகள்
நிரப்பப்படும்
கூடை
 
உபயோகித்த குச்சிகள்
கொண்ட
தீப்பெட்டி
 
நூல்கள் எல்லாம் கிழிந்த
செல்லரிக்கப்பட்ட
நூலகம்
 
மலட்டு விதையில்
புதைக்கப்பட்ட தோட்டம்


28 டிசம்பர், 2020

காதல் கவிதைகள் -மீரா, அபி, புகழேந்தி, சிற்பி

காதல் கவிதைகள் 

- மீரா, அபி, புகழேந்தி & 
சிற்பி பாலசுப்பிரமணியம்


நவயுகக் காதல் :

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்…
 
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங்கூட…
 
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்…
மைத்துனன்மார்கள்
 
எனவே
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

-      மீரா (ஊசிகள்)



நீயும் நானும் :

நீ… நீ… உன்னை
எங்கோ… என்றோ
பார்த்த நினைவு
 
காதல் மாளிகை
நிலா முற்றத்தில்
வசந்தங்களின் ஊர்வலத்தை
வேடிக்கை பார்க்கக்
கூடினோமல்லவா …!
 
நம்மிடம்
சஊகம் அனுப்பிய
வேற்றுமை வெள்ளங்கள்
நம் அன்பின் பனியால்
சமாதியாய் உறைந்த பின்
காலடிச் சத்தத்தால்
வாழ்வின் புதிய தொனிகள்
அறிமுகப்படுத்தினோம்
 
உறக்கக் கோப்பைகளில்
கன்வு மதுவின்
கண்ணாடிக் குமிழிகளில்
நம் முகங்கள்
 
ஒரே நேரத்தில்
பல பிறவிகளை
எடுத்ததை
ரசித்திருக்கிறோம்

-      அபி (மௌனத்தின் நாவுகள்)






ப்ரியமானவளே :


என் எஃகு இதயத்தைக்
‘காந்த’ விழிகளால்
பறித்துக் கொண்டவளே…
நிராயுதபாணியான
என் மீது
உன்
பார்வை அம்புகளால்
நீ
வீசிய பாணம்
என்னை மட்டுமா
தோற்கடித்தது
 
        என் ப்ரிய சகி
தூண்டில் மீனாய்
ஏன்
துன்புறுத்துகிறாய்
 
உன் உடலை விட
எனக்கு
உன்
உடல்தான் இனிக்கிறது…

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)


காதல் நெஞ்சம்:
 
விரிந்த ரோஜா           
ஜன்னல் வழியே
தலை நீட்டும்…
 
குவிந்த இதழில்
மல்லிகை மொட்டுகள்
முறுவலிக்கும்
 
கெண்டை மீன்கள்
இங்குமங்கும்
பாய்ந்து பாய்ந்து
       நீந்தும்,…..
 
பூப்பஞ்சுக் கரங்கள்
புரியாத கோலங்களில்
புணர்ந்து கொள்ளும்
 
கால் விரல்கள்
வெட்கம் சிந்தி
நெஞ்சத்தை சூடேற்றும்…
 
உலகம்
கடுகாய் சிறுத்துக்
காலடியில் கிடக்கும்
 
சுய நலம்
சும்மா இருக்காமல்
சுண்டி சுண்டி இழுக்கும்
 
வெட்கம்
நகக் கண்கள் வழியே
நரம்புகளைத் தாக்கும்…
 
ஓ…
காதல் ஒப்பந்தம்
கையெழுத்தானதாலா...?

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)

விலைமகளிர் கவிதைகள்

விலைமகளிர் கவிதைகள்



விலைமகளிர்:


நாங்கள் ரஜனியின் மக்கள்
மன்மதனின் ஒற்றர்கள்
கற்புச் சிறையை உடைப்பதால்
கைது செய்யப்படுகிறோம்
“………..”
நாங்கள் நிர்வாணத்தை விற்மனை செய்கிறோம்..
ஆடைகள் வாங்குவதற்காக
 
நாங்கள்
மன்மத அச்சகத்தின்
மலிவுப் பதிப்புக்கள்

-       நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)


அரசியல் – கவிதைகள்

அரசியல் – கவிதைகள்




பந்தயக் குதிரை:

ஓ ! அரசியல்வாதிகளே !
நீங்கள்
பந்தயக் குதிரைகள்
என்பதை
மறந்து விடாதீர்கள் !
வேகமாக
ஓடுகின்றவரைதான் !
சறுக்கி விழுந்தீர்களானால் …?

-      மலர் மன்னன் (கதம்பம்)

27 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 3

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 3


என்னை நேசிக்கிறாள் என்று
புரிந்துகொள்ளணுமாம் அவள் புன்னகையுடன் வெட்கத்தை
கண்டு....!

#வெளிநாட்டுக்காரன்


என்னவாகி
போனதோ என்
எண்ணமெல்லாம்
உன்னை
நினைக்கையில்
உயிர்த்துக்கொள்கிறது
அன்பே..

< ச.ரா. எதார்த்தமானவள்


ஒரு விழி மூடி
மறு விழி திறக்கிறாய்..
இரவும் பகலும்
வந்து வந்து
போகிறது..
#நேசம் 

@tvm82