இந்த வலைப்பதிவில் தேடு

18 டிசம்பர், 2020

நான் ரசித்த ஞானக்கூத்தன் கவிதைகள்

நான் ரசித்த 
ஞானக்கூத்தன் கவிதைகள்




கொள்ளிடத்து
முதலைகள்
:

 ஒன்றிரண்டு நான்கைந்து
பத்து பத்தாய்
ஒரு நூறா? ஆயிரமா?
கணக்கில் வாரா
 
கொள்ளிடத்தில் மணல்வெளியில்
நடுச்சாமத்தில்
கரைமரங்கள் தூக்கத்தில்
ஆடும் போதில்
ஒன்றிரண்டு நான்கைந்து
பத்து பத்தாய்
ஒரு நூறா? ஆயிரமா?
கணக்கில் வாரா
 
சிறிது பெரிதாய் முதலைக்  கூட்டம்
சற்றும் அமைதி குலையாமல் அவை
பேசிக் கொள்ளும்
 
சில நொடிக்குள் முடிவெடுத்துக்
கலையும் முன்னே
குறுங்காலால் மணலிலவை
எழுதிப் போட்ட
மரும மொழித் தீர்மானம்
என்ன கூறும்?

****************************************************





அம்மாவின் பொய்கள்:

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்ணை குத்தும் என்றாய்

தின்பதேற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

அத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் அன்று
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென்றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்த்தாய் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன் பிள்ளை உன்னை விடால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?




விடுமுறை தரும் பொய்கள்:

ஞாயிறு தோறும் தலைமறைவாகும்
வேலை எனும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது

 

ஒரு நாள் நீங்கள் போகலை என்றால்
ஆள் அனுப்பிக் கொல்கிறது
மறு நாள் போனால் தீக்கனலாக க்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்குத் தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பலக் காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

 

வாரம் முழுதும் பூதத்துடனே
பழகி போன சில பேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்.
தட்டுப்பொறியின் மந்திர கீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒரு பொருட்டாக
மதியாதிந்த பொய் பூதம்

 

உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உறை அனுப்பும்
வயிற்றில் உன்னை அடிப்பேனென்று
இந்தப் பேச்சை அது கேட்டால்.



நேற்று யாரும் வரவில்லை:

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை
வைத்தியர் சொற்படி ஒரு நாள்
கவனம் கருதி மற்றும் ஒரு நாள்
உடல் நலம் கேட்டு யாரும் வருவார்
திரும்பும்போது
தயவு செய்தெனக்காகச்
சந்து விடாமல் கதவை மூடெனக்
கேட்கணும்.
 
பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல் விளகாய்த்
தெரிந்திடும் நீலவானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது





உதை வாங்கி அழும் குழந்தைக்கு:

என்ன கேட்டாய்?
உன் வீட்டில்
என்ன செய்தாய்?
ஏதெடுத்து
என்ன பார்த்தாய்?
எதைக் கிழித்து
வாங்கிக் கொண்டாய்
அடி உதைகள்?

கெட்டுப் போன
பிள்ளைக்கு
வெளியில் கிடைக்கும்
அடி உதைகள்
கெட்டுப் போகாப்
பிள்ளைக்கு
வீட்டில் கிடைக்கும் முன் கூட்டி
 
அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற் போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே.



போராட்டம்:

கைவசமிருந்த காதற்
கடித்ங்கள் எரிந்தேன் வாசல்
கதவு முன் குவித்துப் போட்டு.
 
காகிதம் எரிந்து கூந்தல்
சுருளை காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்
 
வெளிபுறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக
 
காகிதம் கரியானால்
வெறுமனெ விடுமா காதல் ?

*************************************************

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால்

பிறர் மேல் அதை விட மாட்டேன் 

-------------------------------------------------------------------------------

வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக்கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்.

 
ரத்தம் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப் பாரும்.

------------------------------------------------------------------------------

சமூகம் கெட்டுப் போய் விட்டதடா

சரி

சோடாபுட்டிகள் உடைக்கலாம் வாடா 




அன்று வேறு கிழமை கவிதைத் தொகுப்பிலிருந்து..

கருத்துகள் இல்லை: