இந்த வலைப்பதிவில் தேடு

28 டிசம்பர், 2020

அரசியல் – கவிதைகள்

அரசியல் – கவிதைகள்




பந்தயக் குதிரை:

ஓ ! அரசியல்வாதிகளே !
நீங்கள்
பந்தயக் குதிரைகள்
என்பதை
மறந்து விடாதீர்கள் !
வேகமாக
ஓடுகின்றவரைதான் !
சறுக்கி விழுந்தீர்களானால் …?

-      மலர் மன்னன் (கதம்பம்)

அரசியல்வாதி:

வியாபாரம் செய்பவன்
வியாபாரி
விபச்சாரம் செய்பவள்
விபச்சாரி
இரண்டையும் செய்பவன்
அரசியல்வாதி

-      முருகன் (கதம்பம்)


கல்லறைக் கவிதை :
அரசியல்வாதி:

உண்மையைச் சொல்லப் போனால்
இவனது புகழ்பெற்ற
உண்ணாவிரதப் போராட்டம்
இங்குதான்
ஒழுங்காக நடக்கிறது.
 
தயவு செய்து
அரசியல் பேசாதீர்கள்
இவன்
எழுந்தாலும்
எழுந்து விடுவான்
 
-  மு.மேத்தா (ஊர்வலம்)


இன்றும் நாளையும் :


கட்சித் தலைவர்
வீட்டு முன் நின்று
பள்ளியெழுச்சி பாடிற்று
பட்டினி பஜனை
அங்கே-
வரவேற்பு நல்கிற்று
“நாய்கள் ஜாக்கிரதை”
 
தேர்தல் வந்தது
ஓட்டுக் கேட்கத்
தலைவர்களும் வந்தனர்
வாசல்கள் தோறும்
வரவிருந்ததை ஒட்டியது
“திருடர்கள் ஜாக்கிரதை”

-      சுப.கதிரேசன் (“நீ”)



அறிவுரை :


ரோம் பாரீஸ் லண்டன்
நியூயார்க் டோக்கியோ சிங்கப்பூர்
வழியாக இந்தியா வந்தவுடன்
தலைவர் பேசினார்.
‘டாக்டர்களே !
இஞ்சினீயர்களே !
இளைஞர்களே !
கிராமங்களுக்குச் செல்லுங்கள்
அங்குதான் இந்தியாவின்
ஆன்மா குடியிருக்கிறது’.

-      தாமோதரன் (“நீ”)


அறிவுரைக்கு ஓர் அறிவுரை :


டாக்டர்களும், இஞ்சினீயர்களும்
பிற இளைஞர்களும் சொன்னார்கள்
தலைவர்களே !
 
ரோம் பாரீஸ் லண்டன்
நியூயார்க் டோக்கியோ செல்லுங்கள் !
இந்தியாவின் ஆன்மா
அமைதியாக வாழட்டும் !

-இராசேந்திரமோகன் ( “நீ” )



பிரச்சாரம் :

தேர்தல் மேகம்
சூழ்ந்தபோது
வாக்குச் சீட்டு மழைக்காக
அரசியல் தவளைகள்
போடுகின்ற
வறட்டுக் கூச்சல்

-வெள்ளை மலர்கள்

சட்டமன்றம் :

 
நாலரைக் கோடி
மலர்களின் சார்பாய்
செருப்பு வீச –
‘செந்தமில்’
வார்த்தைகள் அம்மணமாய்…
வேட்டியை அவிழ்த்து
குஸ்திகள் போட
ஒரு
மாநில விளையாட்டு மைதானம்

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)



தேர்தல் :
முதலில்
அட்சய பாத்திரம்
என்றுதான்
எண்ணியிருந்தோம்…
பிறகுதான் தெரிந்தது
வெறும்
பிச்சைப் பாத்திரம் தான்
என்று.

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)

எம்.எல்.ஏ:


பிறர் மனைச் சரித்திரத்தை
வாய் கிழிய
ஏர் கண்டிஷனில்
இருந்து கொண்டு
நரகல் நடையில்
அர்ச்சனை செய்திட
நாம்
தேர்ந்து அனுப்பிய
பூசாரி..

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)

கருத்துகள் இல்லை: