இந்த வலைப்பதிவில் தேடு

29 டிசம்பர், 2020

வாரப் பத்திரிக்கைகளில் வந்த காதல் கவிதைகள் (1989)

வாரப் பத்திரிக்கைகளில் வந்த  காதல் கவிதைகள் (1989)

யாசிப்பு:

அவள் வீட்டுச்
சன்னல் வழியே
பிச்சைப் பாத்திரம்
என் விழிகள் !

-      வசந்த குமாரன்

 

காதல் விடுதலை:

உன் அட்ரஸை
நான்
தெரிந்து கொண்டேன்
என் அட்ரஸை
நான்
தொலைத்து விட்டேன்

-      இதய ராஜா

 

முத்தம்:

புன்னகைப்பதற்கு
நூறு முறை
இதழ்களை விரிக்கும் நீ
முத்தமிடுவதற்காக
ஒரு முறை
குவிக்கக் கூடாதா?

-      இரா. சுந்தர மூர்த்தி

 

அன்பே..
உன்னைப் பிரிந்த நாள் முதல்
என் கைகள் முகம்
கழுவுவதில்லை
என் கண்கள்தான்
முகம் கழுவுகிறது…!

-      கலா பிரபாகர்

  


மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்…
நீ
நான்
இந்தக் கவிதை—

-      வெற்றி பேரொளி

 

கொஞ்சம் :

என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன

தோட்டத்து கலகலப்பில்
பறித்தது கொஞ்சம்

கடற்கரை ஈரத்தில்
காலடித்தடத்தில்
புரண்டது கொஞ்சம்
 
அவளின் பாதக்கொலுசுகளில்
சிந்தியது கொஞ்சம்
 
என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன
சொல்லப்படாமலேயே

-      பொன் சந்தானக்கிருஷணன்




                                   பூ:

நீயல்லவா – பூ
நானெப்படி
வாடினேன்

-      ஏ.ஆரோக்கியராஜ்

 


ஞாபகம் :

காலை தைத்த
இடத்தில் தேய்த்த
போது எறும்பு செத்தது
ஆனாலும் வலி இருந்தது
என் முதல் காதலைப் போல

-      இளங்கோராஜ்


உன்
பாதம் பதிந்த
மண்ணில்
நீர் பாய்ச்சினேன்
ரோஜாத் தோட்டமே
உருவானது

-      K.ராஜா சந்திரசேகர்

 

பெயர் :

உலகத்திலேயே
மிகப் பெரிய கவிதை
எது என்று
எனக்குத் தெரியாது
மிகச் சிறிய
கவிதை தெரியும் –
அது
உன் பெயர்.

-      K. ராஜா சந்திரசேகர்

 


உனக்கென்ன :

உனக்கென்ன
ஒரு சின்னச் சிணுங்கலை
தீப்பொறி போல
வீசி விட்டுப் போகிறாய்
பற்றிக் கொண்டு எரியும்
பஞ்சுப் பொதி
என் மனசல்லவா…?

-      K.ஜெகதீஷ்

 


ப்ரியமானவளே…
இது ஒரு
தண்ணீர் யாசகம் !
 
நீ
ஏற்றுக் கொண்டால்
நிறைந்து போவேன்

இல்லையென்றாலும்
உன் நினைவுகளில்
நினைந்து நினைந்து
கரைந்து போவேன்…
 
ஆம் –
கற்பூரம் எரிந்தால்தான்
அதன் வாசம் தெரியும்
நான் பிரிந்தால்தான்
என் சோகம் புரியும்
 
பதில்:
இந்த களர் நிலம்
உங்கள்
பார்வை மழைக்காக
காலமெல்லம்
காத்திருக்கும் !
இங்கே
புல் விளைந்தாலும்
புதல்வர்கள் விளைந்தாலும்
அது –
உங்களால் மட்டுமே !

-      பா. ராஜகோபாலன்,
மன்னார்குடி


நீ உட்கார்ந்து விட்டுப் போன
பெஞ்சில்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்து கொண்டேன்
நான் -
அப்போது
ஷாஜஹானின் மயிலாசனம் கூடத்
துரும்பாகத் தெரிகிறதடி !

- பாக்யா வார இதழிலிருந்து

கருத்துகள் இல்லை: